Wednesday, 28 September 2011

தேவர் புகழ் வாழ்க



தேவர் திருமகன் முதல் மேடை





1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார். இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, ‘சகோதர சகோதரிகளே’ என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

களப்போர்

பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்.

ரேகைச் சட்டத்தின் கொடுமை

தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை அடக்குமுறை, அமெரிக்க நாட்டிலே அண்மைக் காலம்வரை கருப்பர்களுக்கு எதிரான அடக்குமுறை. இந்த நாட்டிலே விதைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் காரணமாக நிகழ்த்தப்படு கின்ற, நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அன்றைக்கு முக்குலேத்தோர் சமுதாயத்துக்கு விளைந்த அந்த அடக்குமுறைக்கு என்ன காரணம் என்று கேட்டால், 1897 ஆம் ஆண்டு, 1911 ஆம் ஆண்டு 1923 ஆம் ஆண்டு இந்த மூன்றுமுறையும் குற்றப்பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டது. ரேகைச்சட்டம்.

அந்தச் சட்டத்தின்படி, இவர்கள் எல்லாம் குற்றவாளிகள், இந்த இனத்தில் இந்தக் குடும்பங்களில் பிறந்தவர்கள், இவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், குற்றம் செய்யக்கூடிய பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர். ஆகவே, இவர்கள் தங்களது ரேகைகளைக் காவல் நிலையங்களில் போய்ப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்ல. இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை, காவல்நிலையத்தில்தான் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு நீதியின் கதவுகள் திறக்காது. இந்தக் கொடுமை இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு எங்காவது உண்டா?

அதனுடைய 10 ஏ பிரிவு மிகக்கொடுமையானது. அதன்படி, ‘நான் ரேகை கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னால், அதற்கு அபராதமும் போட்டு ஆறு மாதங்கள் சிறையில் தள்ளலாம். இந்தக் கொடிய சட்டத்தை எதிர்த்து, ஜார்ஜ் ஜோசப் என்பவர் முதலாவது தர்ம யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். அந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து நடத்தியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.

அடக்குமுறைக்கு அஞ்சாதே

ரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறபோதுதான் அவர் சொன்னார்; கொடும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சமூகத்து வீரவாலிபர்களைப் பார்த்துச் சொன்னார்; ‘அடக்குமுறைக்கு அஞ்சாது வாருங்கள், ரேகை புரட்டுவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம், ரேகை கொடுக்காதீர்கள்’ என்றார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சீறி எழுந்தார்கள் தென்னாட்டில். துப்பாக்கிகளால் அவர்களை மிரட்டமுடியாது என்பதை சரித்திரம் அன்றைக்கே நிரூபித்துக் காட்டியது.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பதினொரு பேர். மீண்டும் துப்பாக்கிச் சூடு. மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது. வெள்ளைக்கார அரசாங்கம். அவன் கேட்கிறான். ‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான்.

அஞ்ச மாட்டேன்

தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான். பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான்.
தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார். அவன் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனுடைய சொல்லைக் கொண்டே மடக்குகிறார்.

இப்படி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தேவர் திருமகனார், தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்தார். தியாகச்சுடர் காமராசர் அவர்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்தார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் தென்னாட்டு மக்கள். தியாக சீலர் பெருந்தலைவர் காமராசர் அவர்களை நான் மதிக்கிறேன். பதவிக்காலத்தில்கூட தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாது, தன் தாயைப்பற்றிக்கூட கவனிக்காது வாழ்ந்து மறைந்த உத்தமர்தான் காமராசர். அவரை நான் மதிக்கிறேன்.....

Thanks :thevar.info





No comments:

Post a Comment

fuel needed for our race